வேர்களை மறந்த விழுதுகள்

'' வணக்கம், தமிழ் மொழி ''
'' ஹாய்! உள்ள வா.''
இயல்பாய்
உபசரித்தான் நண்பன்

'' பார்த்து எவ்வளவு நாளாச்சு! ''
'' வேல, வாழ்க்கைன்னு வந்துட்டா
எல்லாம் அப்படித்தான்! ''
தாய் தந்த தமிழ் பாஷையில்
மற்றவை
தத்தெடுத்த ஆங்கிலத்தில்
விசாரித்துக்கொண்டோம்.

வீடு
நவின முறையில்
சொகுசாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது
இந்திய சாயலேயில்லை
கருவறை தவிர

வீட்டுத் தலைவி
நவநாகரிக மங்கை
காலம் மாற்றிய நங்கை
இவர் பெயர் கங்கை

சம்பட்டை சாயம் பூசிய
கூந்தல்
கட்டையாக
கட்சிதமாய்
பார்பீ பொம்மை ஸ்டைலில்

கொடுத்தார்
வாய் மணக்கும் புன்னகையோடு
சுடான தேனீர்ரல்ல
ஜீல்லென்ற பழரசம்
பலகாரம்?
அது பழைய பழக்கம்!

மேசையில்
உயிர் தர ஆங்கில நாளிதழ்கள்
ஆங்கில சஞ்சிகைகள்
உணர்வுகளைத் தீண்டும்
படங்களோடு
தமிழ் முரசு எங்கே?
குமுதம், விகடன்?
கண்ணும் மனசும் துலாவியது.

தொலைக்காட்சியில் ஜீ டிவி
அமிதாப் பச்சன்
எங்களோடு
இந்தியில் உரையாடினார்

அவ்வேளையில்
வேலை பார்க்கும் முதல் மகன்
தன் சீனக் காதலியுடன்
வீட்டுக்குள் வந்தனர்
முகத்தில்
நடுக்கம், திகைப்பு, நாணம்
ஒன்றுமில்லை
சர்வ சாதரணமாய்
அறிமுகம் படுத்திக் கொண்டனர்.

சார்ச்சையின்றி
சலனமின்றி
சங்கிதமாய்
அறைக்குள் சென்றனர்
வானத்தில் பறந்து மறைந்த
ஜோடி பறவைகளாய்.

இன்னொரு அறையில்
ஆங்கில 'பாப்' இசை படர்ந்திருந்தது
இரண்டாம் மகள்
பாடும் ஆங்கில பாடகியாய்
உடையிலும் நடையிலும்
மேற்கத்திய மோகத்தின் நகல்.

கணினியில் கடைக்குட்டி
மின்னியல் உலகில்
மின்மினி பூச்சிகள் போல் திரிந்தன
அவன் கண்கள் திரையில்

'' அங்கிள்க்கு ஹாய், சொல்லு! ''
இயந்திரமாய்
'' ஹலோ அங்கிள் ''
'' உன் பெயரென்ன? ''
'' பாரதி ''
மேனி மெய் சிலிர்த்தது
மனசு நிறைவானது
எதையோ நினைத்து...

மெழுகுவர்த்தி

இதயத்தில் எரிக்கிறது
மெழுகுவர்த்தி
ஆசைகளாய்
காதலாய்
கனவுகளாய் சேர்ந்து
சுடர் விடும் வாழ்க்கை

சில ஆசைகள் சுடும்
காதல் சுடும்
உருகும் மெழுகாய்

கடமைக்காக
தீ திண்ட தியாகியாய்
தன் உடல் எரித்து
ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி
எடுத்துக்காட்டும்
எத்தனை நிஜ எடுத்துக்காட்டுகள்
நமது பார்வையில்

பல வண்ணம்
பல அளவு
கொண்ட மெழுகுவர்த்தி
சுடரும் ஒளி ஒன்றே
ஞானம் சுட்ட மானிடா
உன் வேற்றுமைகளைக் கிழி

உன் விழிகளில் எரியும்
நெருப்பு அணையும் முன்
படித்துக்கொள்
மெழுகுவர்த்தி பாடம்
'யாதும் நிரந்தரமில்லை!'
புரிந்துக்கொண்டால்
நிறைவாய் வாழ்வாய்
உன் வழியில்
ஒரு சக்கரவர்த்தியாய்!

சுவடுகள்

நான் பிறந்தேன்
வருட முறை வரும்
கொண்டடாத பிறந்த நாள்
பிறப்பின் ஞாபக சுவடு

நான் வாழ்ந்தேன்
நினைவில் நிறுத்தி
உண்மை சொல்லும்
சுவடுகள் பற்பல
கண்ணீர் கொப்பளத்தில்
பிம்பம் பார்ப்பது போல்
காயத் தழும்புகளாய்
அங்கங்கே
பத்தரமாய் பதமாய்
இருக்கும்

நினைவு அவிழ்ந்தால்
உடை அவிழ்ந்தால் வரும்
கூச்சம் அச்சம் அவமானம்
உடை உடுத்திக் கொள்ளும்
சில சுவடுகள்

சில்லாய் ஒரு சு- வடு
முதல் முறை சொல்லாமல்
அவள் பெயரை
பென்சிலால் எழுதினேன்
கூச்சத்தால்
அழித்தும்
அச்சாய் அழியாமல்
காலத்தோடு வாழ்கிறது
காதல் சுவடாய்
மலாயா வரலாறு
பாடப் புத்தகத்தில்