பிதாமகன்

தத்தி தத்தி நடக்கும் வயதில்
இந்த சுட்டி பேபிக்கு - நீ
என் விளையாட்டு சினேகிதன்
நீ உயிருள்ள விளையாட்டு பொம்மை
சர்கஸ் சகல வித்தைகள் காட்டும்
என் புன்னகை மன்னன்

நீ அடித்தால் எனக்கு வலிக்கும்
நான் அடி அடியாய்
உதை உதையாய் உதைப்பேன்
உனக்கு இன்பம் சுரக்கும்

புரியாத மொழிகளில்
நாம் அரசியல் பேசுவோம்
அரசியல் நடத்துவோம்
என்றும் வெல்வது நான்
தோற்பது நீ!
ராஜ்ஜியம் எனது
கொடி உனது!


சைக்கிள் பழகும் பருவம்
காயம் படாமல் கற்றுத்
தந்தாய் நீ

பூப்போன்ற பருவமது
அன்பால் அரவணைத்தாய்
இதமாய் தாலாட்டுவாய்
எல்லாம் கற்றுத்தந்தாய்
எனை கறை சேர்ப்பாய்
கடன் பட்டவன் நான்!

எல்லாம் மாறியது ஏன்?
பைக் ஓட்டும் பருவம்
வந்தப்பின்

நீ தான் எனக்கு வில்லாதி வில்லன்
நம் வீட்டுக்கு ரவுடி
நீயா? நானா?
அம்மாவைக் கேள்!

உன் நிழலில் வாழ்பவன்
உன் நிழலைக் கண்டால்
எனக்கு அபாயம்

பார்த்தும் பார்க்காமலும்
ஓரே பார்வையில்
பேச்சும் மூச்சும்
புதுபிக்கும் பழைய அரசியல்
அப்பப்ப 'வயசு' கலவரங்கள்
தொடரும் அராஜகமும்
'சர்வாதிக்கார' உன் ஆட்சியும்

ஆதலால் ஆனோம்
எதிரும் புதிருமாய்
காலங்கள் மாறலாம்
பருவங்கள் மாறாது
அதன் அழகையும்
அழுக்கையும் அறியாத
நம் மனம்?!

அறிந்தும் அறியாமலும்
நாம் நம்மைத் தேடுவோம்
உருகும்
நெகிழும் பொழுதுகளில்

எனக்கு நம்பிக்கையிருக்கிறது
கார் ஓட்டும் காலத்திலவது
உனை முன் இருக்கையில்
நண்பனாய் அமர வைத்து
நான்...
நாம் ஊர் சுற்றுவோம்

ஞாபகம் இருக்கிறதா?
எனை முதற் முதலில் பார்த்து
சொன்னாய்...
உனைப்போல் நானிருக்கிறேன்
அப்பொழுது எனக்கு புரிந்திருக்காது
இப்பொழுது நான் சொல்றேன்
உனைப்போல் நான்
உருவத்திலும்
உணர்வுகளிலும்
இது மறவாதே உண்மை
மாறாது நம் உறவும்.


-----------------------------

முழுவதும் கற்பனையில் எழுதிய 'காவியம்'
யதார்த்தம் நிழலாய் பரவியது எழுதிய பின்
ஒவ்வொரு வரிகளிலும்
ஒரு தந்தையும் ஒரு மகனும் ஒழிந்திருக்கலாம்
என் தந்தையும் நானும் சில வரிகளில்
சிதைந்து போகாமல்
அந்த சில்லறைப் பேச்சுகளிலும்
சின்னமாய் இந்த எழுத்துகளிலும்!

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு